Image result for cancer image

புற்றுநோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி) என்பது கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது.

இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன.

இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி அல்லது கழலை எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.
எல்லாக் கழலைகளும் (டியூமர்) புற்று நோய் போன்றவையல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் என இருவகைப்படும். தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.

கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.